தமிழ்நாட்டை பின்பற்றும் டெல்லி - மகளிருக்கு மாதம் ரூ.1000 என பட்ஜெட்டில் அறிவிப்பு!
தமிழ்நாட்டை போல் டெல்லியிலும் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டப் பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அந்த மாநில நிதியமைச்சர் அதிஷி இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது, 18 வயது நிரம்பிய பெண்களுக்கு வரும் ஜூலை மாதம் முதல் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்க ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் பெண்கள் இந்த திட்டத்துக்கு தகுதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து பெண்களுக்கும் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்தார்.
டெல்லி பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட சில முக்கிய அம்சங்கள் வருமாறு;
- கல்வித் துறைக்கு ரூ.16,396 கோடி ஒதுக்கீடு
- புதிய பள்ளிகள் கட்ட ரூ.150 கோடி ஒதுக்கீடு
- தற்போதுள்ள வகுப்பறைகளை பராமரிக்க ரூ.45 கோடி ஒதுக்கீடு
- ஆம்ஆத்மி அரசின் கிளினிக்குகள் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்க ரூ.212 கோடி ஒதுக்கீடு.
- புதிய மருத்துவமனைகள் கட்டுதல் மற்றும் ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை பராமரிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு
புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்க ரூ.194 கோடி ஒதுக்கீடு