விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் ஜூன் 19 அன்று உயிரிழந்தனர். இதேபோல ஜூன் 20 அன்று மேலும் 19 பேர் இறந்தனர்.
இதனிடையே, சேலம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டகளில் 15 பேர் நேற்று (ஜூன் 21) உயிரிழந்தனர். இதன்மூலம், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 90 நபர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 112 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே கடந்த 20.06.2024 அன்று கள்ளக்குறிச்சி சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உயிரிழந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் பாஜக சார்பில் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதன்படி, இன்று (22.06.2024) பாஜக மாநிலத் துணைத் தலைவர் AG சம்பத் தலைமையில் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை பலியானவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. இதனை பாஜக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான SG சூர்யா தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து பலியான கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் உயிரிழந்த 29 குடும்பத்தினருக்கு தமிழக பா.ஜ.க தலைவர் திரு.@annamalai_k அவர்கள் அளித்த வாக்குறுதியின் படி மாநிலத் துணைத் தலைவர் திரு.AG சம்பத் அவர்கள் தலைமையில் இன்று ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை… pic.twitter.com/VQecLtwKbN
— Dr.SG Suryah (@SuryahSG) June 22, 2024