ரவுடி ஜான் கொலை வழக்கு - மேலும் 5 பேர் கைது!
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியன். இவரது மனைவி ஆதிரா. ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் பிரபல ரவுடியாக வலம் வந்ததாக கூறப்படுகிறது. ஜான் மற்றும் அவரது மனைவி ஆதிரா நேற்று (மார்ச் 19) காலை சேலத்தில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். இவர்களின் கார் ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகில்
சென்று கொண்டிருந்தது.
அப்போது அவர்களது காரை மர்ம கும்பல் வழி மறித்து நிறுத்தினர். பின்னர் மர்ம கும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க சென்ற அவரது மனைவி ஆதிராவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த மர்ம கும்பல் மற்றொரு காரில் ஏறி தப்பி சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதிராவை மீட்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த சூழலில் அந்த கும்பல் நசியனூர் பச்சபாளிமேடு பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். பச்சபாளிமேடு பகுதியில் போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் போலீசாரை தாக்க முயன்றனர். இதில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டு ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இதனால் தற்காப்புக்காக அவர்களை நோக்கி போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோர் துப்பாக்கியால் காலில் சுட்டனர். இதில் காயம் அடைந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் காயமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டரும், ஏட்டும் சிகிச்சைக்காக அங்கு சேர்க்கப்பட்டனர்.
அவர்களுக்கு மருத்துவர்கள்ர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், சேலத்தில் பதுங்கி இருந்த பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், பெரியசாமி, சிவகுமார் ஆகிய 5 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். இதன்மூலம், இந்த வழக்கில் இதுவரை மொத்தமாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.