ஏசி காரில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளுடன் காரைக் கடத்திய கொள்ளையர்கள் - சினிமா பாணியில் சேஸிங் செய்து மீட்ட போலீஸ்!
காரில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை விட்டுவிட்டு, பெற்றோர்கள் கடைக்குச் சென்ற நிலையில் அக்காரை குழந்தையோடு திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஒரு தம்பதி தங்களது குழந்தை காரில் ஏசிக் காற்றில் தூக்கிங்க் கொண்டிருந்ததால் கார் என்ஜினை அணைக்காமல் அப்படியே வைத்துவிட்டு கடைக்குச் சென்றுள்ளனர். இதனை நோட்டம் சில மர்ம நபர்கள் காரைத் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி லக்ஷ்மி நகர் பகுதியில் உள்ள இனிப்புக் கடைக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு பெற்றோர் இருவரும் சென்றபோதுதான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பெற்றோர்கள் திரும்ப வந்து பார்க்கும்போது காரும், குழந்தைகளும் இல்லாததைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
காரில் இருந்த இரு குழந்தைகளில் 11 வயது பெண், 2 வயது ஆண் குழந்தை என தெரிய வந்துள்ளது. குழந்தைகளிடம் தனது அம்மாவின் செல்போன் இருந்துள்ளதால் அந்த செல்போன் மூலம் மர்ம நபர் தொடர்புகொண்டு பெற்றோரிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
செய்வதறியாது தவித்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் உடனே புகார் அளித்தனர். காரில் குழந்தைகள் இருந்ததால் உடனடியாக தேடுதல் பணிகளை காவல் துறையினர் முடுக்கிவிட்டனர். காவல்துறை இணை கமிஷனர் சாகர் சிங் கல்சி உடனடியாக இன்ஸ்பெக்டர் சஞ்சய் குப்தா தலைமையில் குழுக்களை அமைத்தார். ஒரு குழு தாயுடனும் மற்றொரு குழு தந்தையுடன் சென்றது. மற்ற இரண்டு குழுக்கள் ஜிபிஎஸ் பொறுத்தப்பட்டு தொழில்நுட்பப்படுத்தப்பட்ட அந்த குடும்பத்தினரின் காரைப் பின்தொடர்ந்தன.
சுமார் 20 போலீஸ் வாகனங்கள் மூன்று மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு 80 கிலோமீட்டரை தாண்டி கடத்திச் சென்ற கடத்தல்காரன் தாங்கள் காவல்துறையால் துரத்தப்படுகிறோம் என்பது உணர்ந்து காரை சமய்பூர் பட்லியில் விட்டுவிட்டு தப்பியோடினர். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டனர். கொள்ளையர்கள் காரில் நகைகள் மற்றும் மொபைல் போன்கள் உட்பட சில விலையர்ந்த பொருட்களையும் அப்படியே விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.