ஆர்டர் செய்த உணவை வழங்காமல் அலைக்கழித்த உணவகம் - ரூ.7000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
ஆர்டர் செய்த உணவை வழங்காமல், மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், உணவகம் ரூ. 7000 நஷ்ட ஈடாக வழங்க திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி சிந்துபூந்துறை வடக்கு தெருவை சார்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஹோட்டலில் இரவு உணவுக்காக புரோட்டா, நெய்ரோஸ்ட் மற்றும் மஸ்ரூம் தோசை பார்சல் கேட்டு ரூ. 484 செலுத்தியுள்ளார். அதற்குரிய ரசீதும் பெற்றுள்ளார். ஒரு மணி நேரமாக காத்திருந்தும் தனியார் ஹோட்டல் பார்சல் வழங்கவில்லை.
சில மணி நேரம் ஆகியும் உணவு வராததால், ஊழியரிடம் கேட்டுள்ளார். அதற்கு பதலளித்த அவர்கள், ஆர்டர் செய்த உணவானது வேறு நபருக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், இட்லி மற்றும் தோசை மட்டுமே உள்ளது என்று தெரிவித்துனர். இதையடுத்து, சிவசுப்பிரமணியன் தான் செலுத்திய பணத்தினை திரும்ப கேட்டுள்ளார். பணத்தை கொடுப்பதற்கு தனியார் ஹோட்டல் மறுத்துள்ளது. மேலும், சிவசுப்பிரமணியிடம் கொடுக்கப்பட்ட ரசீதியில் உணவு டெலிவரி செய்தற்குரிய முத்திரையிடப்படவில்லை என்பாதல் வேறு ஒரு நாளில் வந்து பார்சல் வாங்கிக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சிவசுப்பிரமணியம் இரவு முழுவதும் சாப்பிட முடியாமல் பட்டினியாக ராமேஸ்வரம் சென்றுள்ளார். மன உளைச்சல் ஏற்பட்ட சிவ சுப்பிரமணியம் வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் கிளாட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ. 5000, வழக்குச் செலவு ரூ. 2000 சேர்த்து மொத்தம் 7000 ரூபாயை தனியார்ஹோட்டல் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.