"தொழிற்துறையினருக்கு மின்கட்டண உயர்வை குறைக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம்" - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தொழிற்துறையினருக்கான மின் கட்டண உயர்வை குறைக்க சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழிற்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தொழிற்துறையினர் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சி கோவை ஆவாரம்பாளையம் பகுதியிலுள்ள கோ இண்டியா அரங்கில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு தொழிற்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்று தொழில் அமைப்பினரின் கோரிக்கை மனுவை பெற்று கொண்டனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேசியதாவது:
"ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதும் தொழில்துறையினரின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
பல்வேறு பகுதிகளில் சூரிய ஒளி மின்சாரத்திற்கு மானியமே கொடுக்கக் கூடிய
நிலையில், தமிழகத்தில் அதற்கென தனி கட்டணம் விதிப்பது ஏற்புடையது அல்ல. தொழிற்துறை முடக்கப்பட்டுள்ளதால் பல லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். சிறு குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்க கண்டிப்பாக நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்க அதிமுக தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் கொடுக்கும். தொழித்துறையினரின் கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எடுத்து செல்வோம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள 62 அதிமுக உறுப்பினர்களும் இப்பிரச்னைக்காக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம்.
திமுக அரசு தொழிற்துறையினருக்கு பாதுகாப்பு அளிக்கவிலை. இனியாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் கவனம் செலுத்தி, தொழிற்துறையினரை அழைத்து பேசி கட்டணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
இக் கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், தங்களது கோரிக்கைகளை
அரசு நிறைவேற்றாவிட்டால், வரும் டிசம்பர் 4-ம் தேதி 10 லட்சம் தொழில்
முனைவோர்கள் இணைந்து மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தார்.