For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பதவி விலகுங்கள் ஆர்.என்.ரவி” -செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

10:23 AM Mar 23, 2024 IST | Web Editor
“பதவி விலகுங்கள் ஆர் என் ரவி”  செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
Advertisement

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காத ஆளுநர் ரவியை, உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், அவர் உடனே பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, கடந்த 2006-11 காலக்கட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் கடந்த 2011-ம்ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்தவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அமைச்சராக பதவி வகித்த பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கடந்த டிச.19-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்தவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், பொன்முடியை குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது.

இதையடுத்து, எம்எல்ஏவாக பொன்முடி தொடர்ந்து நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரி,அதற்கான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். ஆனால், ஆளுநர் அந்த பரிந்துரையை நிராகரித்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர், பொன்முடிக்கு தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுக்கும் ஆளுநரின் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக கண்டித்தனர். ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பதவிப் பிரமாணம் செய்து வைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அவர் கூறுவது வினோதமாக இருக்கிறது. அவருக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார். ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது மட்டுமின்றி,எங்களுக்கும் கவலை அளிக்கிறது.

ஆனால், அதை இந்த நீதிமன்றத்தில் நாங்கள் சத்தம்போட்டு கூற விரும்பவில்லை. ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியவர்கள் சரியான ஆலோசனையை வழங்கவில்லை. உச்ச நீதிமன்றம் ஒருதண்டனையை நிறுத்தி வைக்கும்போது, அது ஒரு தண்டனையை தடுக்கிறது என்பது ஆளுநருக்கு தெரியாதா. மனுதாரருக்கு மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததன் மூலம், உச்ச நீதிமன்றத்தை அவர் அவமதித்துள்ளார். அரசியல் சாசனத்தை ஆளுநர் முறையாக பின்பற்றாவிட்டால், மாநில அரசு என்ன செய்யும்?

ஜனநாயக முறைப்படி மனுதாரருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் பரிந்துரை செய்துள்ளார். அதை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும். முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்தில் ஆளுநர் எப்படி தலையிட முடியும். அவருக்கு சட்டம் தெரியுமா, தெரியாதா. அவருக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தகுந்த அறிவுரை கூற வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான கருத்துகளை பதிவு செய்ய நேரிடும். குறிப்பாக உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் என்று ஆர்.என்.ரவியை உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது.

இந்த நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அழைப்பு விடுத்தார். இதையடுத்து பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநரின் செயல்பாட்டை விமர்சித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், " உச்ச நீதிமன்றத்திடம் குட்டுப் பட்டு, குட்டுப் பட்டு உங்களின் தலை வீங்கிப் போயுள்ளது. நல்ல மருத்துவரைப் பாருங்கள். அது உங்களும் நலம். எங்களுக்கும் நலம். பதவி விலகுங்கள் ஆர்.என்.ரவி" என்று பதிவிட்டுள்ளார்.
Tags :
Advertisement