வீடு புகுந்து கணவன் மனைவியை வெட்டிய உறவினர் கைது - ஈரோட்டில் பரபரப்பு!
ஈரோட்டில் சொத்து பிரச்னையில் கணவன் மனைவியை வீடு புகுந்து வெட்டிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் அருகே உள்ள பாரதிபாளையம் முதல் தெருவை சேர்ந்தவர் நல்லசிவம். இவர் வீட்டிலேயே ஜோதிட நிலையம் வைத்து நடத்தி வருகிறார். நல்லசிவத்தின் மனைவி கண்ணம்மாள் (56). இவர் நல்லசிவத்தின் இரண்டாவது மனைவி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என சொல்லப்படுகிறது. கண்ணம்மாளுக்கு நாதகவுண்டன்பாளையத்தில் சொத்து உள்ளது. இந்த சூழலில், கண்ணம்மாளுக்கு அவரின் உடன் பிறந்தவர்களுடன் சொத்து பிரச்னை இருந்துள்ளது.
இந்த நிலையில், கண்ணம்மாளின் சகோதரரான அர்ஜூனனின் மைத்துனர் (மனைவியின் அண்ணன்) சிவக்குமார் என்பவர் நல்லசிவம் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது கண்ணம்மாளுக்கும், சிவக்குமாருக்கும் இடையே சொத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணம்மாளை சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க முயன்ற நல்லசிவத்தையும், சிவக்குமார் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நல்லசிவம் பலத்த காயமடைந்தார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நல்லசிவத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாலுக்கா போலீசார் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சிவக்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தான் சொந்தமாக கார்மெண்ட்ஸ் நடத்தி வருவதாகவும், முள்ளாம்பரப்பு பகுதியில் கண்ணம்மாள் குடும்பத்தினருக்கு சொந்தமான 60லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தை கைப்பற்ற நல்லசிவம் கண்ணமாளை தூண்டிவிட்டு அவரது அண்ணன் அர்ஜுனனிடம் கேட்க வைத்ததாகவும் சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.
இதனால் அர்ஜூனன் குடும்பத்தினர் நிம்மதி இல்லாமல் விரக்தியில் இருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர் கண்ணம்மாளையும் அவரது கணவரையும் வெட்டியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிவக்குமாரை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.