சென்னையில் மேலும் ஒரு 'தங்க மனசுக்காரர்': 5 பவுன் நகையைஉரிமையாளரை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்!
சென்னை அடையாறில் குப்பையில் கிடந்த 5 சவரன் தங்க நகையை உரிமையாளரைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் ரவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
அண்மையில், சென்னை விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தேவராஜ் என்பவர், தவறுதலாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை குப்பைகளுடன் சேர்த்து மாநகராட்சி குப்பை வண்டியில் கொட்டியுள்ளார். இதையடுத்து, அப்பகுதியில் குப்பை சேகரித்து வரும் அந்நிறுவனத்தின் ஓட்டுநரான அந்தோணிசாமி, அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் தீவிர சோதனை நடத்தி, குப்பைகளின் நடுவே இருந்த வைர நெக்லஸை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இது தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோ சமூகவலைதலங்களில் வைரலானது.
இதையடுத்து, தூய்மைப் பணியாளர் அந்தோணி சாமிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா குப்பை வாகன ஓட்டுநர் அந்தோணிசாமியை நேரில் அழைத்து, சால்வை அணிவித்து, ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். மேலும், தூய்மைப்பணியாளர் அந்தோணி சாமியை அலுவலகத்திற்கு வரவழைத்து நேரில் பாராட்டியது நியூஸ் 7 தமிழ்.
இதையும் படியுங்கள் : “நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில் பாஜக அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்நிலையில், தற்போது சென்னை அடையாறு அருகே மீண்டும் ஒரு நெகிழவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடையாறு அருகே வேலாயுதராஜா தெரு, மண்டலம் 13, வார்டு 171-ல் தூய்மைப் பணியாளர் ரவி என்பவர் தனது வழக்கமான பணிகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் சுமார் 2,60,000 மதிப்புள்ள 5 சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலியை குப்பையில் இருந்து மீட்டார். இதையடுத்து, அவர் அந்த 5 சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இவரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.