ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம் - டெல்லி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்..!
நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு அம்மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. அண்மையில் இவரது முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ போலியானது என்பதை கண்டறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கண்டனக் குரல்களை எழுப்பினர். இதையடுத்து DeepFake எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான விமர்சனங்கள் பல எழுந்தன. இந்தியாவில் DeepFake-ஐ கையாள்வதற்கான சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு தேவை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
DeepFake வீடியோ தொடர்பாக வேதனையை பகிர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது X தள பக்கத்தில், “தொழில்நுட்பம் இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுவதால் விளையும் தீங்கு குறித்து மிகவும் பயமாக உள்ளது. ஒரு பெண்ணாகவும், ஒரு நடிககையாகவும், எனக்கு பாதுகாப்பாக, ஆதரவாக இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் போது, இவ்வாறு எனக்கு நடந்திருந்தால், அதை எப்படி சமாளித்திருப்பேன் என்று கற்பனை செய்து பார்க்க முடிவில்லை. இதுபோன்றவற்றால் அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கு முன்பாக, இதற்கான தீர்வு காண வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகை கத்ரினா கைஃப்-ன் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படமும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எச்சரித்திருந்தது.
இதையும் படியுங்கள் : 'ஜிகர்தண்டா டபுள் X' படத்தில் ’அசால்ட்’ சேதுவா...? - சம்பவம் செய்த சுப்புராஜ்..!
இந்நிலையில், நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.