நெருங்கும் ரம்ஜான், சைத்ர நவராத்திரி - உ.பி-யில் இறைச்சி கடைகள் திறந்தால் நடவடிக்கை!
சைத்ர நவராத்திரி விழா வருகிற மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஏப்ரல் 7ஆம் தேதி என மொத்தம் ஒன்பது நாளில் கொண்டாடப்படவுள்ளது. அதே போல் இஸ்லாமியர்கள், பிரை தோன்றலுக்கு ஏற்ப மார்ச் 30 அல்லது ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட உள்ளனர்.
இந்த சூழலில் சைத்ர நவராத்திரி முன்னிட்டு, உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட நகராட்சி ஆணையர் அக்ஷத் வர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம், “நவராத்திரியின்போது நகராட்சிப் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளை மூட நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதைச் செயல்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். உத்தரவுகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். இதை கண்காணிக்க வேன் இயக்கப்படும், தடையை மீறி இறைச்சிக் கடைகள் திறந்தால் தகுந்த நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியுள்ளார்.
இதே போல் டெல்லி திரிலோக்புரியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ரவி காந்த், நவராத்திரியின் போது கிழக்கு டெல்லியில் உள்ள இறைச்சிக் கடைகளை மூடுமாறு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக கிழக்கு மாவட்ட நீதிபதிக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஒன்பது நாள் பண்டிகையின்போது இறைச்சிக் கடைகளை மூடுமாறு வலியுறுத்தி இருக்கிறார்.
சைத்ர நவராத்திரியின் போது இறைச்சி கடைகள் மூட எடுக்கும் முயற்சிகளுக்கு, இஸ்லாமிய மதகுரு வுத்ரி இஃப்ரஹீம் ஹுசைன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியிருப்பதாகவது, “இந்து சமூகத்தின் உணர்வுகளை மதிக்கும் இந்த நடவடிக்கைக்கு இஸ்லாம் சமூகம் எதிர்ப்பு தெரிவிக்காது. இந்த நடவடிக்கை இந்து சமூகத்தின் உணர்வுகளை மதிக்கிறது என்பதால், இஸ்லாமியர்களுக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஒவ்வொரு மதத்திற்கும் அதன் சொந்த உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகள் இருப்பதால், இஸ்லாம் சமூகம் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காது, நாம் அனைவரும் அதை மதிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.