கைவிட்ட ராமர்... காப்பாற்றிய கிருஷ்ணர்.... 2024 மக்களவைத் தேர்தல் சுவாரஸ்யம்...
2024 மக்களவைத் தேர்தல் களத்தில் ராமர் கோயில் முக்கிய பேசுபொருளாகியிருந்த நிலையில், நாடு முழுவதிலும் ராமருக்கு தொடர்புடையதாக கூறப்படும் இடங்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் கிருஷ்ணருடன் தொடர்புடையதாக கூறப்படும் இடங்களை பாஜக வென்றுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இதில் பாஜக மட்டும் 240 இடங்களை பெற்ற நிலையில், ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை பெறாத நிலை ஏற்பட்டது. இதனால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு நாளை (ஜூன் 9) மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
குறிப்பாக, ராமாயணத்துடன் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. அந்த தொகுதிகளின் விவரங்களை கீழே காணலாம்.
- உத்தரப்பிரதேசத்தில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி. இங்குதான் ராமர் பிறந்த இடம் எனக் கூறப்படும் அயோத்தியா உள்ளது. இங்கு ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
- நாசிக்- மகாராஷ்டிரா (வனவாசத்தின் போது ராமர் தங்கியிருந்த இடம் என கூறப்படுகிறது) இங்கும் பாஜக தோற்றது.
- ராம்டேக் - மகாராஷ்டிரா (ராமர் பாதம் பதிந்த இடம் என கூறப்படுகிறது) இங்கும் பாஜக தோற்றது.
- ராமேஸ்வரம் - தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் தொகுதி (இலங்கைக்கு செல்வதற்கு முன் ராமர் பாலம் அமைத்த இடம் என கூறப்படுகிறது) இங்கும் பாஜக கூட்டணி தோல்வியடைந்தது.
- கொப்பல் - கர்நாடக மாநிலம் (ஆஞ்சநேயர் பிறந்ததாக கூறப்படும் இடம்) பாஜக தோல்வியடைந்தது.
- சீதாப்பூர்- உத்தரப்பிரதேசம் (சீதையின் புண்ணிய ஸ்தலம்) பாஜக தோல்வியடைந்தது.
இப்படி ராமர் மற்றும் ராமாயணம் தொடர்புடைய இடங்களில் பாஜக தோல்வியடைந்துள்ளது.
கைவிடாத கிருஷ்ணர்:
அதே நேரத்தில் ஸ்ரீகிருஷ்ணருடன் தொடர்புடைய இடங்கள் எனக் கூறப்படும் பகுதிகள் பாஜகவுக்கு கை கொடுத்துள்ளது.
- கண்ணன் பிறந்ததாகக் கூறப்படும் மதுராவில் (உ.பி) பாஜக வெற்றி ( வேட்பாளர் ஹேமாமாலினி)
- கண்ணன் ஆட்சி செய்ததாகக் கூறப்படும் துவாரகா (டெல்லி மேற்கு தொகுதி) வெற்றி
- கண்ணன் தன் ரூபத்தை தானே செதுக்கியதாக கூறப்படும் பூரி ஜகன்னாத் (ஒடிசா) கோயில் உள்ள மாநிலமான ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி.
- கண்ணன் குடிகொண்ட குருவாயூரில் (திருச்சூர் தொகுதி - கேரளா) பாஜக வெற்றியடைந்துள்ளது.
ராமர், ராமர் கோயில் ஆகிய வார்த்தைகள் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் முக்கிய பேசுபொருளாக இருந்த நிலையில், இந்த மேற்குறிப்பிட்ட தொகுதிகளின் வெற்றி நிலவரம் கவனம் ஈர்த்துள்ளது.