வீட்டைச் சூழ்ந்த மழைநீர் - சமாஜ்வாதி எம்.பியை தூக்கிச் சென்ற ஊழியர்கள்!
சமாஜ்வாதி எம்.பி ராம் கோபால் யாதவின் வீட்டைச் சுற்றிலும் மழைநீர் சூழுந்ததால், அவரை ஊழியர்கள் தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியானது.
டெல்லியில் நேற்று காலையிலிருந்து பலத்த மழை பெய்து வந்தது. பல மணி நேரமாக பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் பல குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் வாட்டி வதைத்த வெயில் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவித்த நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் தண்ணீர் தட்டுப்பாடு தீரும் என்கிறபோதிலும் அடுத்த வீடுகள் மற்றும் குடியிறுப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் இக்கட்டான சூழலில் தாங்கள் மாட்டிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சமாஜ்வாதி எம்.பி ராம் கோபால் யாதவின் வீட்டைச் சுற்றிலும் மழைநீர் சூழுந்ததால், மழைநீரில் கால் வைக்காமல் காரில் ஏறுவதற்காக தனது வீட்டில் பணிபுரிபவர்களை அழைத்துள்ளார். அவர்கள் ராம் கோபால் யாதவை தூக்கிக்கொண்டதால், அவர் கால் நனையாமல் காரில் ஏறி நாடாளுமன்றத்துக்கு புறப்பட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. இதற்கு பலரும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.