தமிழ்நாடு தேர்வர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் - ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்!
மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 18 ஆயிரத்து 799 உதவி லோக்கோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் வருகிற மார்ச் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,315 தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சு. வெங்கடேசன் எம்.பி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரயில்வே தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் ரயில்வே தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது. அதில், ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான இரண்டாம் கட்டத்தேர்வு அனைவருக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் விண்ணப்பதாரர்களுக்கு முடிந்த அளவு சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளனஎன்றும் இதில் எந்த பாகுபாடும் காட்டவில்லை. அண்டை மாநிலங்களில் தேர்வு நடத்துவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.