" #J&K -க்கு மாநில அந்தஸ்து - INDIA கூட்டணி அழுத்தம் கொடுக்கும்" - ராகுல்காந்தி!
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கவில்லையெனில் INDIA கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகியதாக இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று (செப்.25) ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. காங்கிரஸும், தேசிய மாநாடு கட்சியும் கூட்டணியாக போட்டியிடுகின்றன. மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1ம் தேதியும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதையடுத்து, அக். 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படியுங்கள் : MUDA நில முறைகேடு விவகாரம் – சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
இந்நிலையில், 3-ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஜே.கே. ரிசார்ட் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்ததாவது :
"இந்திய வரலாற்றில் ஒரு போதும் ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்தை பறித்துவிட்டு, அதனை யூனியன் பிரதேசமாக நாங்கள் மாற்றியதில்லை. மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க பாஜக தவறினால், இந்தியா கூட்டணி மக்களவை, மாநிலங்களவை முதல் வீதிகள் வரையில் இறங்கி, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். உள்ளூர் மக்களை ஓரங்கட்டி, லெப்டினன்ட் கவர்னர் மூலம் வெளியாள்களுக்கு பயனளிக்கும் வகையில், மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது அவசியம். அது உங்கள் உரிமை; அதுதான் உங்கள் எதிர்காலம்"
இவ்வாறு அவர் பொதுகூட்டத்தில் பேசினார்.