For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர முடிவு - தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பு!

08:43 PM Jun 17, 2024 IST | Web Editor
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம் பி யாக தொடர முடிவு   தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பு
Advertisement

ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியில் எம்.பி.யாக தொடர்வதை வரவேற்கும் வகையில், “வடக்கையும், தெற்கையும் இணைக்கிற வகையில் அகில இந்திய காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவு மிகவும் பொருத்தமானது” என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“ராகுல் காந்தி கடந்த மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியிலும், கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். வெற்றிபெற்ற பிறகு இரு தொகுதிகளிலும் மக்களை சந்தித்து தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றியை கூறினார். இதில் எந்த தொகுதியில் மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி நீடிப்பது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து ஆலோசனை நிகழ்த்திய பிறகு ராகுல் காந்தி ரேபரேலி மக்களவை உறுப்பினராக நீடிப்பதென முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் வயநாடு மக்களவை தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இம்முடிவு லட்சக்கணக்கான காங்கிரஸ் கட்சியினரிடையே மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். கடந்த மக்களவை தேர்தல் பரப்புரையின்போது நரேந்திர மோடி வடநாடு, தென்நாடு என்று மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை நடத்தினார். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தனர்.

இந்நிலையில் வடக்கையும், தெற்கையும் இணைக்கிற வகையில் அகில இந்திய காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவு மிகவும் பொருத்தமானதாகும். நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தி சிக்மகளூர் மக்களவை தொகுதியில் இருந்தும், சோனியா காந்தி பெல்லாரி தொகுதியில் இருந்தும் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர்களாக பொறுப்பு வகித்துள்ளார்கள்.

 

இந்திய மக்கள் அனைவரையும் சமமாக கருதுகிற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி குறித்து அகில இந்திய காங்கிரஸ் எடுத்த முடிவு அரசியல் ரீதியாகவும், தொலைநோக்கு பார்வையுடனும் எடுக்கப்பட்ட சரியான முடிவாகும். இந்திய மக்களை இரு தலைவர்களும் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement