"ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை" - இந்திய தேர்தல் ஆணையம்!
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டபேரவைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஜுன் 24 அன்று இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்கு எதிர் கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தில் பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளிலும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து,பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ”தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைச் செய்கிறது. இது தொடர்பாக 'அணு குண்டு' போன்ற ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவை வெளியானால் தேர்தல் ஆணையம் ஒளிந்துகொள்ள இடம் இருக்காது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியின் குற்றசாட்டிற்கு பதிலளித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், "நாள்தோறும் கூறப்படும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, அச்சுறுத்தல்களை தேர்தல் ஆணையம் புறக்கணிக்கிறது. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் பாரபட்சமின்றியும் வெளிப்படையாகவும் பணியாற்றுகின்றனர். எனவே இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளைப் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.