வயநாடு இடைத்தேர்தல் | அண்ணன் ராகுலை மிஞ்சிய தங்கை பிரியங்கா காந்தி! 6 லட்சம் வாக்குகளுடன் முன்னிலை!
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி சுமார் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார்.இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நவம்பர் 13ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 62.39% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : மகாராஷ்டிரா தேர்தல் – சியோன் கோலிவாடா தொகுதியில் தமிழ்செல்வன் முன்னிலை!
இந்த சூழலில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், வயநாடு இடைத்தேர்தலில் அண்ணன் ராகுல் காந்தியின் சாதனையை தங்கை பிரியங்கா காந்தி முறியடித்துள்ளார்.
கடந்த மே மாதம் வயநாட்டில் நடந்த தேர்தலில் ராகுல் காந்தி 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்பொது நடைபெற்ற வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி சுமார் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இன்னும் எண்ணப்பட வேண்டிய வாக்குகள் பெரும் அளவில் உள்ளதால் பிரியங்கா காந்தி வயநாட்டில் மகத்தான வெற்றியை பெறுவார் என கூறப்படுகிறது.
முன்னிலை நிலவரம்:
காங்கிரஸ் - 6,22,338
சி.பி.ஐ - 2,11,407
பா.ஜனதா - 1,09,939