பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பல்வேறு மாநிலத்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு உலக மற்றும் உள்நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். குறிப்பாக இந்த தாக்குதலுக்கு தொடக்கத்தில் இருந்து கண்டனம் தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று, தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு விரைந்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தாக்குதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அத்துடன் அங்குள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின் அவர் அளித்த பேட்டியில், “பயங்கரவாதிகள் செய்ய முயற்சிப்பதை நாம் முறியடிக்க ஒவ்வொரு இந்தியரும் ஒற்றுமையாக, ஒன்றாக நிற்பது மிகவும் முக்கியம். காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளை சிலர் தாக்குவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக நின்று, இந்த மோசமான நடவடிக்கையை எதிர்த்துப் போராடி, பயங்கரவாதத்தை முற்றிலுமாக தோற்கடிக்க வேண்டும். நான் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோரை சந்தித்தேன். அவர்கள் தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கினார்கள். எனது கட்சியும் நானும் அவர்களுக்கு முழு ஆதரவளிப்போம் என்று உறுதியளித்தேன்.