“ராகுல் காந்தி கண்ணியமான பதிலை அளிப்பார்” - சுப்ரியா சுலே எம்.பி. நம்பிக்கை
காங்கிரஸ் கட்சி தலைவர்களை பாஜக பலமுறை விமர்சித்துள்ள நிலையில், ராகுல் காந்தி ஏதாவது பேசினால், அதற்கு பாஜகவினர் வருத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜஸ்தானில் கடந்த நவம்பர் 21-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங். எம்.பி. ராகுல் காந்தி, “உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் வெற்றி பெறும் நிலையில் இருந்தனர். துரதிர்ஷ்டம் அவர்களை தோற்கச் செய்தது. நாட்டின் மக்கள் இதனை அறிவார்கள்” என்று பேசினார்.
தொடர்ந்து, நவம்பர் 22-ம் தேதி ராஜஸ்தானின் பரத்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், “பிக்பாக்கெட் அடிப்பவர்கள் தனியாக வருவதில்லை. 3 பேர் இருக்கிறார்கள். ஒருவர் திரையின்முன் தோன்றி மக்களின் சிந்தனையை சிதறடிக்கிறார். இன்னொருவர் பணத்தை எடுக்கிறார். மூன்றாவது நபர் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கிறார்” என்று ராகுல் காந்தி பேசினார்.
இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததாக ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இது தொடர்பாக நவம்பர் 25-ம் தேதிக்குள் ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, “ராகுல் காந்தி ஒரு வலிமையான, நேர்மையான தலைவர். அவர் ஒரு போராளி. அவர் கண்ணியமான பதிலை அளிப்பார் என்று நம்புகிறேன். அவர் நேர்மையானவர் என்பதால் எதற்கும் அவர் பயப்பட வேண்டியதில்லை. ராகுல் காந்தியின் தாத்தா ஜவஹர்லால் நேரு, அவரது பாட்டி இந்திரா காந்தி என அவரது குடும்பத்தினருக்கு எதிராக பாஜக பலமுறை கருத்து தெரிவித்துள்ளது. அப்படியிருக்க, இப்போது ராகுல் ஏதாவது பேசினால், அதற்கு பாஜகவினர் வருத்தப்பட வேண்டிய அவசியம் என்ன?” என்று தெரிவித்துள்ளார்.