#Puducherry | துணை நிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்!
புதுச்சேரியில் ரவுடிகளால் தாக்கப்பட்ட கடை உரிமையாளருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று தெரிவித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகே பெட்டிக்கடை நடத்தி வருபவர் சந்திரன். இவர் கடைக்கு நேற்று இரவு குடிபோதையில் வந்த ரவுடிகள் சிலர் மாமூல் கேட்டு மிரட்டினர். சந்திரன் தரமறுத்ததால், ஆத்திரமடைந்த ரவுடிகள் சந்திரனை தாக்கினர். சந்திரன் சத்தமிட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த தாக்குதலில் சந்திரனுக்கு தலையில் பலத்த காயமடைந்த நிலையில், அவர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதுலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று காலை சாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறும்படி சந்திரனிடம் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அவர் இன்று காலை சாரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சந்திரன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தங்களிடம் ஸ்கேன் வசதி இல்லாததால் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினர். இதையடுத்து அவர் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 20க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர், சிகிச்சை பெற்று வந்த சந்திரனை ஸ்ட்ரெச்சரோடு அழைத்துக்கொண்டு ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பாதிக்கப்பட்ட சந்திரனுக்கு உரிய சிகிச்சை அளிக்காததைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரியவந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்து ஆளுநரை சந்திக்க போவதாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, படுகாயமடைந்த கடை உரிமையாளர் சந்திரனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சந்திரனை அழைத்துச் செல்ல அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அதில் மருத்துவர்கள் இல்லாததால், மருத்துவர் இல்லாமல் வெறும் நோயாளி மட்டும் அனுப்பக்கூடாது என ஆம்புலன்ஸை புறப்பட விடாமல் போராட்டக்காரர்கள் கீழே படுத்து போலீசார் உடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆளுநர் மாளிகை முன்பு பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவர் வரவழைக்கப்பட்டு, அதன்பிறகு சந்திரன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.