For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுபான ஆலை அனுமதியில் ஊழல் : சிபிஐ விசாரணை கோரும் நாராயணசாமி!

புதுச்சேரி மதுபான ஆலை உரிமை பெற்ற விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் முதலமைச்சர் ரங்கசாமி சிறை செல்வார் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
06:39 PM Jan 12, 2025 IST | Web Editor
மதுபான ஆலை அனுமதியில் ஊழல்   சிபிஐ விசாரணை கோரும் நாராயணசாமி
Advertisement

புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

Advertisement

“தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு கொடுக்காமல் உள்ளனர். இலவச வேஷ்டி, சேலையும் வழங்காமல் பணமாக கொடுக்கின்றனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியை குறை சொன்ன முதலமைச்சர் ரங்கசாமி இப்பொழுது என்ன செய்கிறார்?

ரூ.750-க்கு பொங்கல் பொருட்கள் வாங்க முடியுமா?.  ஒட்டு மொத்த புதுச்சேரி மக்களும் வஞ்சிக்கப்படுகிறார்கள். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய் உள்ளது. துணைநிலை ஆளுநரை கூட்டணி கட்சிகளுடன் சென்று சந்தித்து, மனு அளித்து மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்த கேட்போம். ஏற்கனவே மின்சார துறையை அதானியிடம் ஒப்படைக்க ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

திடீரென ரூ.330 கோடி முதலீடு செய்து ப்ரீபெய்டு மின் மீட்டர் வாங்கி தற்போதுள்ள மீட்டர்களை மாற்ற முடிவு செய்துள்ளனர். அதையும் அதானியிடம் ஒப்படைப்பதற்கான வேலையை முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் செய்து வருகின்றனர். புதிய கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படாது என முதலமைச்சர் கூறியிருந்தார்.

ஆனால் 2025 ஜனவரியில் மக்களுக்கு வழங்கப்பட்ட மின்சார ரசீதில் பழைய நிலுவை கட்டணத்தையும் சேர்த்து கொடுத்துள்ளனர். மக்களை ஏமாற்றும், வஞ்சிக்கும் வேலையை அரசு செய்து வருகிறது. எந்த காலத்திலேயும் மின்சார துறையை தனியார் மயமாக்க விடமாட்டோம்.

ப்ரீபெய்டு திட்டத்தை நடைமுறைபட்டுத்த விடமாட்டோம். அரசை எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடும். புதுச்சேரியில் மதுபான ஆலை உரிமத்தை பெற முதல்கட்ட கடிதம் 8 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. அப்போதைய துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் இல்லாமல், இடைக்கால அனுமதியை புதுச்சேரி அரசு மதுபான உற்பத்திக்கு அந்த கம்பெனிகளுக்கு கொடுத்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். 8 மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க சிக்கல் உள்ளதால் அமைச்சரவைக்கு கொண்டு வந்து ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. மதுபான உரிமை கொடுப்பதற்காக இந்த அரசு செய்துள்ள தில்லுமுல்லு, ஊழல் தொடர்பாக துணைநிலை ஆளுநர், சிபிஐ விசாரணை நடத்தவேண்டும். இல்லையென்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை.

முதல் கட்டமாக துணை நிலை ஆளுநரை சந்திக்க உள்ளோம். மேலும் இந்த விவகாரத்தில் ஆலைகளுக்கு அனுமதி தரப்பட்டால் அதில் ஆளுநருக்கு தொடர்பு உள்ளதாகதான் அர்த்தம் என்றும், சிபிஐ விசாரணை வைத்தால் முதலமைச்சர் ரங்கசாமி சிறைக்கு செல்வது உறுதி" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement