For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதுச்சேரி சிறுமி கொலை - 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

10:05 PM Mar 06, 2024 IST | Web Editor
புதுச்சேரி சிறுமி கொலை   6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
Advertisement

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார்.  சிறுமியை பெற்றோரும்,  உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சிறுமி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.  பின்னர் தீவிர விசாரணை நடத்தியதில், சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. சிறுமியை விரைந்து மீட்கக்கோரி குடும்பத்தினரும், உறவினர்களும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நேற்று சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி, கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமியை கொலை செய்து கால்வாயில் வீசியது தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில் போலீசார் ஒரு முதியவர் உட்பட 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, சிறுமியை கொலை செய்ததை கருணாஸ் (19) என்ற இளைஞர் மற்றும் விவேகானந்தன் (57) என்ற முதியவர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததில், அதிர்ச்சி அடைந்த சிறுமி உயிரிழந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர் கை மற்றும் கால்களை கட்டி முதியவரின் வேஷ்டியில் வாய்காலுக்குள் சிறுமியின் உடலை போட்டுள்ளனர். குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலியுறுத்தியும், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள் கருப்பு உடை அணிந்து புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

மேலும் அதிமுக, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை மறுநாள் பந்த் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுமி கொலை வழக்கில் கொலை செய்தல், கடத்தல், அடைத்து வைத்தல், குற்றத்தை மறைத்தல், போக்சோ, வன்கொடுமை தடுப்பு என 6 பிரிவுகளின் கீழ் குற்றவாளிகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இனி பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை பிரசுரிக்க கூடாது எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement