புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு - காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்!
புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து மார்ச் 5 ஆம் தேதி சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி, கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது, சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படியுங்கள் : ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வு! இன்றைய விலை நிலவரம் என்ன?
சிறுமியை கொலை செய்ததை கருணாஸ் (19) என்ற இளைஞர் மற்றும் விவேகானந்தன் (57) என்ற முதியவர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததில், அதிர்ச்சி அடைந்த சிறுமி உயிரிழந்ததும் தெரியவந்தது. குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலியுறுத்தி இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள் கருப்பு உடை அணிந்து புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. மருத்துவமனையில் சிறுமியின் உடலை வாங்க மறுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததைத் தொடந்து, சிறுமியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், சிறுமியின் உடல் ஊர்வலமாக சோலை நகர் பகுதியில் உள்ள பாப்பம்மாள் திருக்காட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள், அரசியில் பிரமுகர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துக்கொண்டனர்.
சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள், அரசியில் பிரமுகர்கள், பொது மக்கள் அனைவரும் கோஷங்களை எழுப்பினர். இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க வழி நெடுக்கிலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.இதையடுத்து, புதுச்சேரியில் வீட்டின் அருகே சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
"புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வம் பணியிட மாற்றம் செய்யப்படுவார். இதையடுத்து, காவல் நிலையத்தில் உள்ள மற்ற காவலர்கள் குறித்து விசாரணை செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்"
இவ்வாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.