புதுச்சேரி சிறுமி கொலை – காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம்!
புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து மார்ச் 5 ஆம் தேதி சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி, கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது, சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியை கொலை செய்ததை கருணாஸ் (19) என்ற இளைஞர் மற்றும் விவேகானந்தன் (57) என்ற முதியவர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததில், அதிர்ச்சி அடைந்த சிறுமி உயிரிழந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர் கை மற்றும் கால்களை கட்டி முதியவரின் வேஷ்டியில் வாய்காலுக்குள் சிறுமியின் உடலை போட்டுள்ளனர். குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : WPL 2024 : RCB அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத் அணி!
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"9 வயது புதுச்சேரி சிறுமி கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து நடைபெறுவது ஏன்? 2022ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.3 லட்சம் குற்றங்கள் நடந்துள்ளன. இதில் 31,000 குற்றங்கள் பாலியல் வன்கொடுமையாக நிகழ்ந்துள்ளன.
உத்தரகாண்ட்டில் சாலையில் அமர்ந்திருக்கும் அங்கிதா பண்டாரியின் குடும்பமாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்காததால் குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவனாக இருந்தாலும் சரி, இது போன்ற ஒவ்வொரு சம்பவமும் ஒரு உணர்வற்ற அமைப்பு மற்றும் இரக்கமற்ற சமூகத்தின் பிரதிபலிப்பாகும். பெண்களுக்கான பாதுகாப்பும் மரியாதையுமே வளர்ந்த தேசத்தின் அடையாளம்"
இவ்வாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.