புதுச்சேரியில் முதல்வர் மற்றும் PRTC ஊழியர்கள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி!
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் (PRTC) பணிப்புரியும் ஒப்பந்த ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் கோரிக்கை வைத்துவருகின்றனர். அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், அனைத்து ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு சம்பளத்தை வழங்க கோரியும் சாலைப் போக்குவரத்து கழக ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட நடவடிக்கை குழு சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த நோட்டீஸ் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பேருந்துகள் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதலமைச்சர் ரங்கசாமி போக்குவரத்து ஊழியர்களுடன் சட்டசபையில் பேச்சு வார்த்தையில் நடத்தினார்.
பேச்சு வார்த்தையின் போது, ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ 10 ஆயிரம் ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனவும், நிரந்தர ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி ஊழியர்களிடம் உறுதி அளித்தார். ஆனால் முதலமைச்சரின் உறுதியை ஏற்க மறுத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.