சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாடு உரிமையை பாதுகாக்க ஆர்ப்பாட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு
மதுரை திருப்பரங்குன்றம் மலையில், முருகன் கோயிலும் சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. இதில் தர்காவில் ஆடுகளை பலி செலுத்துவதாக ஒரு தரப்பு குற்றம்சாட்டி வந்தனர். அதேபோல் மற்றொரு தரப்பு நீண்ட காலமாக தர்காவில் ஆடுகளை பலியிட்டு சமபந்தி நடத்தி வருவதாக கூறினர்.
இதற்கிடையில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க மதுரையில் கடந்த பிப்ரவரி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இந்து முன்னணியினர் 144 தடை உத்தரவை பயன்படுத்தி பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்வதை தடுக்க கூடாது, பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்த கோரி வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து பழங்காநத்தத்தில் ஆர்பாட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் பேரில் கடந்த 4ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி சன்னதி தெருவில் இருந்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி மதுரையை சேர்ந்த சையது ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அவரின் மனு நீதிபதி தனபால் முன்பு இன்று(பிப்.20) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் மிகவும் அமைதியான முறையில் வழிபாடுகளை செய்து வருகின்றனர் என்றும் போராட்டம் ஆர்ப்பாட்டம் என இதுவரை 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.
வாதங்களை கேட்ட நீதிபதி, சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்தால் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டார். மேலும் பொதுமக்கள் நலன் கருதியும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு காவல்துறை அனுமதி மறுத்தது சரியே என்று கருத்து தெரிவித்தார்.