முதல்முறையாக தேர்தல் களத்தில் கால் பதிக்கும் பிரியங்கா காந்தி - வயநாடு தொகுதியில் போட்டி!
மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல்காந்தி, வயநாடு தொகுதியை ராஜிநாமா செய்வதாக அறிவித்ததையடுத்து, வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அதேநேரம் மறுபுறம் காங்கிரஸ் கட்சி இந்த முறை மொத்தம் 99 தொகுதிகளில் வென்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த முறை வென்ற கேரள மாநிலம் வயநாட்டு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.
இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விதிகளின்படி, ஒரு நபர் இரண்டு இடங்களில் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் இரண்டிலும் வெற்றி பெற்றுவிட்டால் இரண்டில் எதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒருவரால் ஒரே நேரத்தில் இரு பதவியில் இருக்க முடியாது. ஒரு தொகுதியை மட்டுமே ஒரு நேரத்தில் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பதே இதன் விதியாகும்.
பிரியங்கா காந்தி:
12 ஜனவரி 1972 அன்று ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு அவர்களின் இரண்டு குழந்தைகளில் இளையவராகப் பிறந்தவர் பிரியங்கா காந்தி. பிரியங்கா காந்தி 1984-ம் ஆண்டு வரை டேராடூனில் உள்ள வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரியில் , டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் 2010 இல் பௌத்த ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார் .
தற்போது ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி இடைதேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால் முதன்முறையாக பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட்டு தீவிர அரசியலுக்குள் நுழைய இருக்கிறார்.