“நாட்டை விட்டு வெளியேற எண்ணியபோது, பிரியங்கா காந்தி நம்பிக்கை ஊட்டினார்” - #VineshPhogat பரப்புரை!
மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தின் போது, தாங்கள் நாட்டைவிட்டு வெளியேற எண்ணியதாகவும், பிரியங்கா காந்தி தன்னிடம் தைரியத்தை இழக்கக்கூடாதென நம்பிக்கை ஊட்டியதாகவும் வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆக. 6-ம் தேதி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். காங்கிரஸில் இணைந்த சில மணி நேரத்திலேயே ஹரியாணா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வினேஷ் போகத்துக்கு காங்கிரஸ் கட்சி அளித்தது. 90 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய ஹரியானாவில் அக்டோபர் 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக். 8-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், மல்யுத்தக் களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த 30 வயதான வினேஷ் போகத், ஹரியானாவில் ஜுலானா பேரவைத் தொகுயில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். வினேஷ் போகத் இந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (செப். 8) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தின் போது வினேஷ் போகத்திடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு பதிலளித்து பேசிய அவர், “மல்யுத்தத்தில் எனக்கு ஆதரவளித்ததைப் போன்று மக்கள் வழங்கி வரும் ஆதரவை அரசியலிலும் தொடர்ந்து அளிப்பார்கள். மக்களின் ஆசிர்வாதத்துடன் நாங்கள் ஒவ்வொரு களத்திலும் வெற்றி பெறுவோம். எனக்கு 30 வயதாகிறது. பல சவால்களைக் கடந்து வந்துள்ளேன். நம்முடன் மக்கள் இருக்கும்போது எந்தவொரு சவாலையும் கடந்துவிடலாம். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த காங்கிரஸுக்கு நன்றி. வெற்றி பெறுகிறோமா அல்லது தோல்வியடைகிறோமா என்பது முக்கியமில்லை.
டெல்லியில் முன்பு, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, நாங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தோம். நாட்டைவிட்டு வெளியேறக்கூட எண்ணினோம். ஆனால், பிரியங்கா காந்தி என்னிடம் தைரியத்தை இழக்கக்கூடாதென நம்பிக்கை ஊட்டினார். மல்யுத்தம் மூலம் எதிராளிகளுக்கு பதிலளியுங்கள் என்று கூறினார். அதேபோல ராகுல் காந்தியை மதிக்கிறேன். அவர் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக மக்களை சந்தித்து அவர்களின் வலியை உணர்ந்து புரிந்துகொள்கிறார்.
அனைத்துக்கும் மேலாக, மக்கள் அளிக்கும் மதிப்பே உயர்ந்தது. நான் இங்கு மக்கள் முன்பு நிற்பதற்கு மல்யுத்தமே காரணம். மக்கள் தங்கள் மகள்கள், அவர்களின் கனவுகளை அடைய ஆதரவாக இருக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.