For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை’ - புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து அமித்ஷா பேச்சு!

02:49 PM Jul 01, 2024 IST | Web Editor
‘பெண்கள்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை’   புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து அமித்ஷா பேச்சு
Advertisement

புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement

புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“முதலில் நம் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நம்முடைய சொந்த குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்த சட்டங்கள் இந்திய நெறிமுறைப்படி செயல்படும்.
75 ஆண்டுகளுக்கு பிறகு சிந்திக்கப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. காலனித்துவ சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளன.

தண்டனைக்கு பதிலாக தற்போது நியாயம் கிடைக்கும். தாமதத்துக்கு பதிலாக விரைவான விசாரணையும், தீர்ப்பும் கிடைக்கும். முன்னதாக காவல்துறையின் உரிமை மட்டுமே பாதுகாக்கப்பட்டது. இனி புகார்தாரர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமையும் பாதுகாக்கப்படும்.

நமது அரசியலமைப்புக்கு ஏற்றவாறு சட்டப் பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்க தீர்மானித்தோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கூட்டாக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டால் 20 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும். சிறுமிகளை வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும்.

பொய் வாக்குறுதி அளித்து அல்லது அடையாளத்தை மறைத்து பாலியல்ரீதியாக ஏமாற்றினால் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. பெண் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண் வீட்டிலேயே வாக்குமூலம் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையும் ஆன்லைனில் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நிறைய பெண்களை காப்பாற்ற முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

அதிகாலை 12.10 மணிக்கு புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் குவாலியர் காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகிய ஆங்கிலேயா் ஆட்சிக் கால சட்டங்களுக்கு மாற்றாக ‘பாரதிய நியாய சன்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா’, ‘பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய 3 புதிய மசோதாக்களை மத்திய அரசு சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றது. இந்த புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, இந்த மூன்று மசோதாக்களும் சட்டமாகின.  இந்த மூன்று சட்டங்களும் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன.

Tags :
Advertisement