"பிரதமர் நரேந்திர மோடி பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் இல்லை" - காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் இல்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைபயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடைபயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. இந்த நடைபயணம் அஸ்ஸாம், மேகாலயா, மேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட் மாநிலங்களை கடந்து தற்போது ஒடிஸாவில் பயணித்து வருகிறார். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றிய போது “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பின்தங்கிய சமூகத்திலிருந்து வந்த தலைவர்கள் அவமதிக்கப்பட்டனர். குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சேர்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது." என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் ஒடிஸாவில் மக்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசியதுதாவது:
"இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்ததாக நாட்டையே ஏமாற்றி வருகிறார் பிரதமர் மோடி. அவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறக்கவில்லை. அவர் பொதுப் பிரிவில் இருந்த தெலி சாதியில்தான் பிறந்தார். 2000-ம் ஆண்டு பாஜக ஆட்சியின்போது தான் அந்த சாதியை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் மாற்றினர். இதனை அனைத்து பாஜக தொண்டர்களிடமும் கூறுங்கள்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.