For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2 மாத இடைவேளையில் 4 முறை தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி! அரசுமுறை பயணம் முதல் அரசியல் பேச்சு வரை...

11:46 PM Mar 04, 2024 IST | Web Editor
2 மாத இடைவேளையில் 4 முறை தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி  அரசுமுறை பயணம் முதல் அரசியல் பேச்சு வரை
Advertisement

2024-ஆம் ஆண்டு தொடங்கிய கையோடு ஜனவரி மாதத்தில் 2 முறை தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, தற்போது கடந்த 10 நாட்களுக்குள் மீண்டும் 2 முறை தமிழ்நாடு வந்துள்ளார். இந்த 4 பயணங்களிலும் நடந்தது என்ன? பிரதமர் நரேந்திர மோடி பேசிய என்ன? விரிவாக பார்க்கலாம். 

Advertisement

நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால் 2024-ம் ஆண்டின் ஒவ்வோர் அரசியல் நடவடிக்கையும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதுபோல ஆண்டின் தொடக்கத்திலேயே சுமார் 2 மாத இடைவேளையில் 4 முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வந்திருப்பதும் கவனிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 2-ஆம் தேதி திருச்சி வந்தார். அப்போது, பாரதிதாசன் பல்கலைகழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதோடு, திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் திறந்துவைத்து உரையாற்றினார். வெள்ள பாதிப்பு, விஜயகாந்த் மறைவு, இந்தியாவின் வளர்ச்சி குறித்தும் பேசினார். குறிப்பாக `கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகமாக தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது’ என்பதை அழுத்தமாகப் பேசினார். இதனை தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனை முக்கியத்துவம் பெற்றது.

இதனை அடுத்து ஜனவரி 19-ஆம் தேதி கேலோ இந்தியா போட்டியில் தொடக்க விழாவில் பங்கேற்பது உள்ளிட்ட 3 நாள் பயண திட்டத்துடன் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார்.

முதலாவதாக சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது பேசுகையில், 2024ம் ஆண்டில் விளையாட்டுத் துறைக்கு சிறப்பான தொடக்கமாக கேலோ இந்தியா விளையாட்டு அமைந்துள்ளது. தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தரும். சென்னைக்கு வந்தது சொந்த ஊருக்கு வந்ததுபோல இருக்கிறது. விளையாட்டுத்துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது. விளையாட்டில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறேன் என்றார். முன்னதாக, வணக்கம் சென்னை எனக் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும், பெருமை முயற்சி தரும் என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டினார்.

பின்னர் இப்பயணத்தின் இரண்டாம் நாளில் (ஜனவரி - 20) திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதனை அடுத்து பிரதமர் நரேந்திர ராமேஸ்வரம் சென்றார். அங்கு கடலில் புனித நீராடிய பிரதமர் ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்திற்கு சென்று அங்கு இரவு தங்கினார்.

இதனை தொடர்ந்து பயணத்தின் மூன்றாவது நாளான ஜனவரி 21-ஆம் தேதி  ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். பின்னர் காரில் சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்றார்.

பின்னர் கோதண்டராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, ராமர் பாலம் இருந்ததாகக் கூறப்படும் இடத்தை பார்வையிட்டார். இவ்வாறு கடந்த ஜனவரி 19-ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, கேலோ இந்தியா விளையாட்டு தொடக்க விழாவில் தொடங்கி 3 நாள் பயணத்தை ஆன்மீக பயணமாக நிறைவு செய்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்த பயணத்தை அடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி 2 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வந்தார் பிரதமர் நரேந்த்ர மோடி. அப்போது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு வந்தவுடன் எம்.ஜி.ஆர் நினைவுக்கு வந்தார். அவர் பணி செய்த மண்ணில் இருப்பது மகிழ்ச்சி.  அவர் எழைகளுக்கு செய்த உதவியால் இன்னும் நினைவில் இருக்கிறார்.  அவர் குடும்ப ஆட்சி செய்யவில்லை.  அவருக்கு பிறகு தமிழகத்தில் நல்ல ஆட்சியை கொடுத்தது ஜெயலலிதா மட்டுமே.  அதனால் தான் திமுக எம்.ஜி.ஆரை இழிவு செய்து ஆட்சி செய்து வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாள் சமீபத்தில் முடிந்தது .  இந்நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.  எம் ஜி.ஆர் கொள்கைகளை பின்பற்றி ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அதிமுகவுடன் கூட்டணி முறித்த நிலையில், பிரதமர் மோடி அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பின்னர் பல்லடம் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு மதுரை சென்றடைந்த பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர் தூத்துக்குடி சென்ற பிரதமர் மோடி, அங்கு அரசின் ரூ.17.300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, மக்களின் சேவகனாக இருந்து, நான் உங்களின் தேவைகளை விருப்பங்களை நிறைவேற்றுவேன்.  மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் சாலை வழி இணைப்புகள் மிகவும் சிறப்பாக மாறியுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகள் அதிகரித்திருக்கிறது என்றார்.

இதனை தொடர்ந்து பயணத்தின் இரண்டாம் நாளான பிப்ரவரி 28-ஆம் தேதி திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி எனது சாதனைகளை வெளியிட விடாமல் தொலைக்காட்சிகளை தமிழக அரசு தடுக்கிறது.

மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் தமிழக அரசு குறை சொல்கிறது. மக்களவை தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகும் என பேசியிருந்தார்.

இதனை அடுத்து இன்று 2024-ஆம் தொடங்கியதிலிருந்து நான்காவது முறையாக பிரதமர் மீண்டும் தமிழ்நாடு வந்தார். இந்த முறை ஒரு நாள் பயணமாக வந்த அவர், கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலை மின்உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து மாலையில் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகி கட்சி வளர்ச்சியடைந்து வருவதால், சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் சென்னையின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது. சென்னை மக்களின் தேவைகளை திமுக பூர்த்திசெய்யவில்லை. திமுகவுக்கு மக்கள் துயரங்களைப் பற்றி கவலையில்லை. தமிழகத்தில் போதைப்பொருள் தங்கு தடையின்றி கிடைக்கின்றது. போதைப் பொருள் புழக்கத்தால் தமிழக மக்கள் கவலையில் உள்ளனர். குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கும் வகையில் போதைப்பொருள் புழக்கம் உள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை திமுக அரசு ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மோடி தரும் வாக்குறுதி.

நாட்டின் நலனுக்காக நான் குடும்பத்தை விட்டு வெளியேறி பணியாற்றி வருகிறேன். மக்களின் நம்பிக்கையை குடும்ப அரசியல் செய்வோர் கொச்சைப்படுத்தி வருகின்றனர். மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டத்திற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஓட்டுகிறது. திமுக அரசு கொள்ளையடித்த பணம் மீட்கப்படும். இது, தான் நான் தரும் உத்தரவாதம்.மத்திய அரசின் திட்டத்தால் திமுக கொள்ளையடிக்க முடியாமல் உள்ளது. நாட்டு மக்களை கருத்தில் கொண்டு நான் அரசியல் செய்கிறேன். மோடிக்கு குடும்பம் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. நாம் அனைவரும் சேர்ந்துதான் மோடியின் குடும்பம். இந்த நாடு தான் என் குடும்பம், இந்த நாட்டு மக்கள்தான் என் குடும்பம். யார் ஆதரவின்றி இருக்கிறனரோ, அவர் என் குடும்பம். தற்போது தேசமே கூறுகிறது நான் மோடியின் குடும்பத்தைச்சேர்ந்தவன் என்று. தேசத்தின் நலனுக்காகவே நான் இளம் வயதிலேயே குடும்பத்திலிருந்து விலகினேன். தேசத்துக்கே முன்னுரிமை என்று கூறியதால் என்மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இப்படியாக கடந்த 2 மாத இடைவேளையில் நான்கு முறை தமிழகம் வந்ததோடு, திமுக குறித்து விமர்சிப்பது, ஆன்மீக சுற்று பயணம் மேற்கொள்வது, நலத்திட்டங்களை தொடங்கி வைப்பது, அதிமுக தலைவர்களை புகழ்வது என பல்வேறு வகைகளில் கவனம் பெற்று வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

Tags :
Advertisement