தான்சானியா தேர்தல் வன்முறை - 700 பேர் உயிரிழப்பு!
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் சிசிஎம் கட்சியைச் சேர்ந்த சமியா சுலுஹூ ஹசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டினர். இதன் காரணமாக தான்சானியாவில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
அப்போது எதிர்க்கட்சியினர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் வன்முறை வெடித்துள்ளது. டார் எஸ் சலாம், மவான்சா, டொடோமா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தினால் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதுடன், இணையதள சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிருபர்கள் செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக நடக்கும் மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான பதேமா தெரிவித்துள்ளது. .நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புத்துறை வட்டாரங்களும் உறுதிப்படுத்தி உள்ளது.