அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில்கூற வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில்கூற வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு அண்மையில் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை; அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது' என்றார். இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
” 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு, ஒப்பீட்டளவில் இந்திய ரூபாயின் மதிப்பு சிறிய அளவிலேயே வீழ்ச்சி கண்டது. ஆனால், அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி காங்கிரஸ் அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். தற்போது, 'விஸ்வகுரு” என பாஜகவினரால் அழைக்கப்படும் மோடியின் வயதைக் காட்டிலும் ரூபாய் மதிப்பு
வெகுவாக சரிந்துள்ளது.
இந்தச் சரிவு மக்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை, இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையிலே தீர்மானிக்கப்படும். 2014-இல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.59-ஆக இருந்தது.
இதை பாஜக தற்போது ரூ.84-ஆக உயர்த்தியுள்ளது. அதாவது, 2014-இல், வெளிநாடுகளில் ஒரு டாலர் மதிப்பில் விற்கப்படும் பொருளுக்கு நாம் ரூ.59 செலுத்தினால் போதுமானது. ஆனால், தற்போது அதே பொருளுக்கு நாம் ரூ.84 செலுத்த வேண்டும். ரூபாயின் மதிப்பு
வீழ்ச்சியடைந்ததால் கூடுதலாக நாம் ரூ.25 செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை 80 சதவீதம் இறக்குமதி மூலமே நிறைவு செய்யப்படுகிறது.
இதற்கு பெரும்பாலும் டாலரில் பணம் செலுத்த வேண்டியுள்ளது. அதன்படி, கூடுதல் விலை
கொடுத்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வருகிறது. இதன் காரணமாகவே, மக்கள் கூடுதல் விலை கொடுத்து பெட்ரோல், டீசலை வாங்க வேண்டியுள்ளது. இதன் தொடர் விளைவாக, உணவுப் பொருள்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
பொதுவாகவே பணவீக்கம் அதிகரிக்கும்போது, விலை உயர்வைக் கட்டுப்படுத்த கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தும். இதனால், கல்விக் கடன், வீட்டுக் கடன், கார் கடன் வாங்கிய மக்கள் வங்கிகளுக்கு கூடுதல் வட்டியை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில்கூற வேண்டும் ” என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.