இன்று கோவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.
பிரதமர் மோடி இன்று (மார்ச் 18) கோயம்புத்தூரில் நடைபெறும் சாலை வாகனப் பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக கர்நாடகத்தில் இருந்து விமானம் மூலமாக இன்று மாலை 5.30 மணி அளவில் கோவை விமான நிலையம் வரும் பிரதமர், 5.45 மணிக்கு கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து வாகனப் பேரணியை துவக்குகிறார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த பேரணி ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே முடிவடைகிறது. அதன்பின், கோவை ஆர்.எஸ்.புரத்தில் 1998-ஆம் ஆண்டு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். இரவு கோவை சர்க்யூட் ஹவுசில் தங்கும் பிரதமர், நாளை (மார்ச் 19) காலை கேரளா புறப்படுகிறார்.
இதையும் படியுங்கள் : சாம்பியன் பட்டம் வென்ற RCB மகளிர் அணி | வீடியோ காலில் வாழ்த்து சொன்ன விராட் கோலி!
இதற்காக, கோயம்புத்தூர் மாநகர பகுதியில் உள்ள கவுண்டம்பாளையம் சந்திப்பு முதல் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பாஜக சார்பில் பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கட்சிக்கொடிகள் நடப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பணியாளர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் துறையோடு இணைந்து மத்திய பாதுகாப்பு குழுவினரும் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு ஒத்திகை நேற்று
நடைபெற்றது. விமான நிலையத்தில் இருந்து காரில் பாதுகாப்பாக சாய்பாபா கோயில் சந்திப்புக்கு அழைத்துச் செல்லப்படுவதுபோலவும், இதனைத் தொடர்ந்து சாய்பாபா கோயில் சந்திப்பில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை வாகனப் பேரணியில் ஈடுபட உள்ளதாகவும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள், தமிழ்நாடு காவல் துறையினரின் வாகனங்களும் அணிவகுத்துச் சென்றன.