பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான் - திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்தி அதிமுக வாக்குகளை குறி வைக்கும் பாஜக!
அ.தி.மு.க தலைவர்களை புகழ்ந்து பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பின்னால் இருப்பதாக சொல்லப்படும் பாஜகவின் வியூகம் குறித்து விரிவாக பார்க்கலாம்...
அ.தி.மு.க-விற்கு புகழாரம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 27, 28 தேதிகளில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசுகையில், ’’தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு பிறகு ஜெயலலிதா நல்லாட்சி புரிந்தார்’’ என்றவர், ’’எம்.ஜி.ஆருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இன்றைய திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது’’ என்றார்.
தி.மு.க மீது கடும் விமர்சனம்
பல்லடத்தைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ’’திமுகவில் ஒரு குடும்பத்தினர் மட்டுமே முக்கிய பதவிகளில் உள்ளனர். திமுக தமிழ்நாட்டை சுரண்டுவது போல, காங்கிரஸ் கட்சி I.N.D.I.A கூட்டணியை அமைத்து, நாட்டை கொள்ளையடிக்க முயற்சிக்கிறது. தங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்காகவே, இவர்கள் ஆட்சிக்கு வர நினைக்கின்றனர். வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருக்காது. காணாமல் போகும்’’ என்று திமுக மீதான விமர்சனத்தை சற்று கடுமையாகவே மோடி வைத்தார்.
அ.தி.மு.கவில் ஏற்பட்ட மாற்றங்கள்
இந்த பேச்சின் பின்னணி குறித்து செல்வதற்கு முன்பாக, 2016ம் ஆண்டுக்கு பிறகு நடந்தவற்றையும் நினைவு கூற வேண்டியுள்ளது. அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று அக்கட்சியினரால் அழைக்கப்பட்ட, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழ்நாட்டு அரசியல் களத்தில், குறிப்பாகஅதிமுகவில் பல்வேறு அதிரடி காட்சிகள் அரங்கேறின. முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி விலகல் மற்றும் தர்மயுத்தம். தற்காலிக பொதுச் செயலாளராக இருந்தவர், முதலமைச்சராகவும் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வி.கே.சசிகலா சிறை சென்றது.
அவர் சிறைக்கு செல்லும் முன், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கியது. டிடிவி தினகரன் கைது... சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கம். ஓபிஎஸ் - இபிஎஸ் கரங்களை கோர்த்த ஆளுநர், தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற தனிக் கட்சியைத் தொடங்கிய தினகரன், ஒருங்கிணைப்பாளராகிய ஓபிஎஸ், பின்னர் ஓபிஎஸ் உள்ளிட்டோரும் நீக்கம்.
ஒற்றைத் தலைமையாக உருவெடுத்த இபிஎஸ்... என பல அதிரடி அரசியல் மாற்றங்களும் திரைப்படத்தை தாண்டிய விறுவிறுப்பானவை.
அதிமுகவில் நடைபெற்ற எதிர்பாரா பல மாற்றங்களுக்கு பின்னால் டெல்லியில் உள்ள அதிகார மையம் இருந்தது என்கிற கருத்தும் அப்போது நிலவியது.
அண்ணாமலை விமர்சனம் - மோடி பாராட்டு
இணக்கமாக சென்று கொண்டிருந்த கூட்டணியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சு அடிக்கடி சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, மறைந்த முதலமைச்சரின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து அவர் அளித்த பேட்டி, பேரறிஞர் அண்ணா - பசும்பொன் முத்துராமலிக்க தேவர் தொடர்புடைய சர்ச்சைக்குரிய கருத்து உள்ளிட்டவற்றால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டது. கடந்த 2023 செப்டம்பரில் கூட்டணி முறிவு என்கிற நிலையை எட்டியது.
ஆனாலும், கூட்டணி முறிவு குறித்து பாஜகவின் தேசிய தலைவர்கள், மூத்த தலைவர்கள் மவுனம் காத்தே வருகின்றனர். கூட்டணிக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார் மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்தார். கதவுகள் மட்டுமல்ல ஜன்னலும் திறந்தே இருக்கிறது என்றார் அண்ணாமலை. ஆனால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியானது என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
பாஜகவின் வியூகம் என்ன?
இப்போது மீண்டும் பிரதமரின் பேச்சுக்கு வருவோம். முதல் நாள் அதிமுக ஆட்சி மற்றும் தலைவர்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் அடுத்த நாளில் திமுக-வையும் திமுக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இரண்டும் தேர்தல் கணக்கோடுதான் என்கிறார்கள். இது அதிமுக தொண்டர்களின் மத்தியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பாஜகவினரால் நம்பப்படுகிறது என்கிறார்கள்.
குறிப்பாக, கடந்த 1998ல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. அதிமுகவின் கூட்டணி முடிவு பல கட்சிகளை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்தது என்பார்கள். அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுடனும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இரண்டில், அதிமுகவே பாஜகவினர் பெரிதும் விரும்பும் கூட்டணியாக அமைந்துள்ளது என்கிறார்கள் அக்கட்சிகளின் மூத்த தலைவர்கள். ஆனால், 2004 தேர்தல் கூட்டணி முறிவுக்கு பின்னர், பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி என்று அறிவித்த ஜெயலலிதா, 2014 தேர்தலில் குஜராத்தின் மோடியா, தமிழ்நாட்டின் லேடியா என்று சவால் விட்டு, தனித்து நின்று 37 இடங்களில் வென்று, இந்தியாவின் 3அது பெரிய கட்சியாகியது அதிமுக.
அதிமுகவின் பிரச்சாரம் தொடக்கம்
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் நடைபெற்ற மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தன. கடந்த 2023 செப்டம்பர் மாதம், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்தது. ஆனாலும் பாஜக தலைவர்கள் கூட்டணி இன்னும் ஏற்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. ஆகையால்தான், ரகசிய கூட்டணி தொடர்கிறது என்று திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
அதிமுக தலைவர்களை புகழ்ந்து பிரதமர் பேசியது, கூட்டணிக்கான அழைப்பாக கருத முடியாது என்கின்றனர் அதிமுக மூத்த தலைவர்கள். ’தேர்தலில் தனி அணியை அமைப்போம். பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை. தனி அணி அமைப்போம். தமிழ்நாட்டு நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்’’ என்கிற எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் தேர்தல் முழக்கமாக ‘தமிழர் உரிமை மீட்போம் தமிழ்நாடு காப்போம்’ என்கிற இலச்சினையாக வெளியிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டோம் என்கிறார்கள்.
கூட்டணியை விரும்பும் பாஜக
இந்நிலையில், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், ஐ.ஜே.கே, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் ஆதரவு அணி ஆகியவை இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் பிரதமர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு பாஜக-வின் சார்பில் தேசிய ஜனநாயகக் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்தவும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன் ராதாகிருஷ்ணன், H ராஜா, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவர்கள். ஆகையால், வருகை வரை அதிமுக கூட்டணிக்கு முயற்சிப்பது. இல்லையேல், அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பது என்கிற வியூகத்தை வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பிரதமர் பேச்சின் வெளிப்பாடு
இதன்வெளிப்பாடகத்தான், அதிமுகவின் வாக்குகளை குறி வைத்து, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பிரதமர் பேசியது என்கிறார்கள். இதுமட்டுமன்றி, அதிமுகவின் நிரந்த வாக்கு வங்கியாக இருப்பதாக சொல்லப்படும், திமுக எதிர்ப்பு வாக்குகளையும் குறி வைத்துள்ளனர். அதற்காகத்தான் திமுகவின் மீதான விமர்சனத்தையும் கடுமையாக்கியுள்ளது பாஜக. இதைத்தான் பிரதமர் மோடி பேசியுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பாஜகவின் வியூகம், பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான் வெற்றியைத் தருமா...? பொருத்திருந்து பார்க்கலாம்....