பிரதமர் மோடி நாளை பூடான் பயணம்!
அண்டை நாடான பூடான், இந்தியாவுடன் சிறந்த நட்புறவை பேணி வருகிறது. இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை (நவ.11) பூடானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது. அப்போது, இந்த பயணத்தின்போது இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா.நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பூடானின் முன்னாள் மன்னரும், தற்போதைய மன்னரின் தந்தையுமான ஜிக்மே வாங்சுக்கின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
முன்னதாக, பிரதமர் மோடி கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூடானுக்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு பூடானின் மிக உயர்ந்த குடிமகன் விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டு அரசாங்கத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்படத்தக்கது.