‘மோடி கா பரிவார்’-க்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் மோடி!
சமூக ஊடகங்களில் இருந்து ‘மோடி கா பரிவார்’ என்பதை நீக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜன் விஷ்வாஸ் பேரணியில் பேசியபோது, “பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். உங்களுக்கு குடும்பம், குழந்தைகள் என யாராவது இருக்கிறார்களா? எப்போதும் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என விமர்சனம் செய்து வருகிறீர்கள். உங்களுக்கு குடும்பம் இல்லை என்றால் யார் என்ன செய்ய முடியும்? முதலில் மோடி இந்துவே இல்லை. அவரது தாய் இறந்த போது மொட்டை அடித்தாரா?" என்று கடுமையாக பேசியிருந்தார்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் இருந்து ‘மோடி கா பரிவார்’ என்பதை நீக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“தேர்தல் பிரசாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் என் மீதான பாசத்தின் அடையாளமாக தங்கள் சமூக ஊடகங்களில் 'மோடி கா பரிவார்' என சேர்த்தனர். நான் அதிலிருந்து நிறைய பலம் பெற்றேன். இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். இது ஒரு வகையான சாதனையாகும். மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்கியுள்ளனர்.
நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து ‘மோடி கா பரிவார்’ என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காட்சிப் பெயர் மாறலாம். ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு குடும்பம் என்ற நமது பந்தம் வலுவாகவும் உடைக்கப்படாமலும் உள்ளது”
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.