முடியாது என்பதை முடித்துக் காட்டுபவர் பிரதமர் மோடி - அண்ணாமலை பேச்சு!
முடியாது என்று சொன்ன அனைத்தையும் மோடி செய்து முடித்துள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் யாத்திரையின் போது தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே மக்களவை தேர்தலையொட்டி அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகத்தை திறக்க மாநில பாஜகவுக்கு அதன் தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலும் பாஜக தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. தென்சென்னை, வடசென்னை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் பாஜக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
தொடர்ந்து, என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் ஒரு பகுதியாக வேலூர் வந்த அண்ணாமலை, ஆர்காடு பேருந்து நிலையத்தில் பேசியதாவது, “2024-ம் ஆண்டில் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது. 2028-ம் ஆண்டில் உலகில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். பாரதிய ஜனதா கட்சியின் குரல் சாம்மானிய மக்களின் குரல். திமுக அமைச்சரவையில் 35 அமைச்சர்களில் 3 பேர் மட்டுமே பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். முடியாது என்று சொன்ன அனைத்தையும் மோடி செய்து முடித்துள்ளார். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை நரேந்திர மோடிக்கு ஒப்படையுங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.