“இடஒதுக்கீடு வரலாறு தெரியாமல் பிரதமர் மோடி பேசுகிறார்” - ப.சிதம்பரம் சாடல்!
இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து உளறி வருகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தின் தீசா நகரம், சபர்கந்தா மாவட்டத்தின் ஹிம்மத்நகர் பகுதிகளில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே. 2) பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஒருபோதும் வழங்கமாட்டோம் என அறிவிக்குமாறு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு சவால் விடுவதாகவும், மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படாது என காங்கிரஸ் எழுத்துபூர்வமாக உறுதியளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ப.சிதம்பரம், இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து உளறி வருகிறார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“மத அடிப்படையில் யாருக்கும் இட ஒதுக்கீடு வழங்க அனுமதிக்கப்பட மாட்டோம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அத்தகைய அறிவிப்பு அல்லது வாக்குறுதி எதுவும் இல்லை. இந்தியக் கூட்டணியின் எந்தக் கட்சியும் அறிவிக்கவில்லை. மோடி நீண்ட காலம் வாழட்டும்! பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என்று காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று மோடி வரலாற்றை மறந்துவிட்டு கேட்கிறார்.
Hon'ble prime minister continues to fight ghosts in his election speeches
He said that as long as he is alive, no one will be allowed to give out quotas based on religion. FACT: Congress' manifesto has made no such declaration or promise. Nor has any party in the INDIAlliance.…
— P. Chidambaram (@PChidambaram_IN) May 2, 2024
பட்டியலினத்தவர், பழங்குடியினர் பிரிவினருக்கான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டது. 1951-ம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசு வேலைகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்டது என்ற வரலாறும் மோடிக்கு தெரியவில்லை.
பாஜகவிடம் இதே போன்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்தால், 2004 முதல் பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது”
என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.