“தமிழ் மீது பாசம் காட்டுவதாக பிரதமர் மோடி வேஷம் போடுகிறார்..” - மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பரப்புரை!
தமிழின் மீது பாசம் காட்டுவதாக பிரதமர் மோடி வேஷம் போடுவதாக தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
தென்சென்னை தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழச்சி தங்கப் பாண்டியனை ஆதரித்து வேளச்சேரியில் நேற்று (ஏப். 16) இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இந்த வாகனப் பேரணியில் அத்தொகுதியின் வேட்பாளர் தமிழச்சி தங்கப் பாண்டியனுடன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிக்க வரும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு, திமுக நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து, வழி நெடுகிலும் மலர் தூவி, ஆரத்தி எடுத்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வாக்கு சேகரிக்க செல்லும் தமிழச்சி தங்கபாண்டியன் மேளதாளங்களுடன் சென்று பொதுமக்களிடையே தான் செயல்படுத்திய திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, மாலை 7 மணியளவில் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சைதாப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் சென்னை மாநகர துணை மேயர் மகேஷ் குமார், பத்திரிக்கையாளர் கோ.வி.லெனின், திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சைதை சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொதுக்கூட்ட மேடையில் தமிமுன் அன்சாரி, “தமிழின் மீது பாசம் காட்டுவதாக பிரதமர் மோடி வேஷம் போடுகிறார். செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நிதியாக ரூ.74 கோடியை ஒதுக்கினார். ஆனால் பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு ரூ.1487 கோடியை ஒதுக்கியுள்ளார். இதுதான் பிரதமர் மோடி தமிழ் மொழியின் மீது காட்டும் அக்கறையா?” என கேள்வி எழுப்பினார்.