இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!
இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பதாக இந்திய வெளியுறவு விவகாரத் துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆஸ்திரியா புறபட்டு சென்றார். கடந்த 41 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியா சென்றிருப்பது இதுவே முதல்முறை. விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மர் மற்றும் முக்கியத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உக்ரைன் போர், பயங்கரவாதத்துக்கு எதிராக உலகம் அணி திரள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் மற்றும் இரு நாட்டு ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடி, ஆஸ்திரிய பிரதமர் நெகம்மருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இருநாட்டு நிறுவனங்களும், உள்கட்டமைப்பு, மறுஆக்கம் செய்யக்கூடிய எரிசக்தி, பசுமைப் பரப்பு, புதிய தொழில்நுட்பங்கள், தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் கூட்டாண்மையை மேற்கொள்ளும் திறன் பெற்றுள்ளன என்று இந்திய வெளியுறவு விவகாரத் துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஆஸ்திரிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.