“பிரதமர் மோடி அரசின் தலைப்புச் செய்திக்கான முயற்சி” - ‘அரசியல் சாசன படுகொலை தினம்’ அறிவிப்பு குறித்து காங்கிரஸ் காட்டம்!
ஜூன் 25-ம் தேதியை ‘இந்திய அரசியல் சாசன படுகொலை தினம்’ என அனுசரிக்கப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பு தலைப்புச் செய்திக்கான முயற்சி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
1975ஆம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்பு 352வது பிரிவானது செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு எதிரான அனைத்து செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டு இருந்தன.
இந்திராகாந்தி ஆலோசனையின் பெயரில் அப்போதைய குடியரசு தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த எமெர்ஜென்சி 1977 மார்ச் 21 வரையில் அமலில் இருந்தது. அப்போது பல்வேறு அரசியல் தலைவர்கள் மீதான கைது நடவடிக்கை, மாநில அரசுகள் கலைக்கும் சூழல் என நாடே பரபரப்பாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இந்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதால் பாஜகவினர் அதனை தற்போது வரையில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்த அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவசரநிலை பிரகடனம் பற்றி பிரதமர் மோடி உட்பட பாஜக எம்பிக்கள் பலர் விமர்சனம் செய்தனர். இதனால், காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர். வெளியிலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி, இனி ’இந்திய அரசியல் சாசன படுகொலை தினம்’ ஆக கடைப்பிடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய அரசியல் சாசன படுகொலை தினம் அனுசரிக்கப்படுவது, ஒவ்வொரு இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும் உதவும். இதனால் காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள், அந்த கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும்” என தெரிவித்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமர் மேற்கொள்ளும் தலைப்புச் செய்திக்கான மற்றுமொரு பாசாங்குத்தனமான முயற்சியே இது. அறிவிக்கப்படாத 10 ஆண்டுகளாக அவசரநிலையை பிறப்பித்தவர் அவர். அதன் காரணமாகவே, இந்த தேர்தலில் மக்கள் அவருக்கு தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மிக தோல்வியை வழங்கினர். தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4, மோடி விடுதலை நாளாக வரலாற்றில் பதிவாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் கொள்கைகள், மதிப்புகள் மற்றும் நிறுவனங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்திய பிரதமர் இவர். இந்திய அரசியல் சாசனம் மனுஸ்மிருதியிலிருந்து உத்வேகம் பெறவில்லை என்பதால் அதனை நிராகரிக்கிறோம் என கூறியவர்களின் கருத்தியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். டெமாக்ரசி என்பது டெமோ-சேர் மட்டுமே" என்று விமர்சித்துள்ளார்.