For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்" - செல்வப்பெருந்தகை பேட்டி

01:18 PM May 22, 2024 IST | Web Editor
 தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு பிரதமர் மோடியும்  அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்    செல்வப்பெருந்தகை பேட்டி
Advertisement

தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும்,  88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும்,  93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும்,  96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும்,  49 தொகுதிகளில் கடந்த 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.

இதையடுத்து,  6ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 25-ஆம் தேதியும்,  7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளன.  தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இந்நிலையில்,  ஒடிசாவில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி,  புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் தொலைந்து போன சாவிகள் தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது,

"நேற்றைய தினம் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி தமிழர்களை திருடர்கள் என்று
கூறியுள்ளார்.  தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள நினைப்பதா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார்.  தேர்தல் ஆணையம் எப்போது விழித்துக் கொள்ளும் என்று தெரியவில்லை.  வரலாற்று சிறப்புமிக்க தமிழ் மொழியின் வரலாற்றை சாதாரண மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் பிரதமர் மோடி ஏன் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை? பாஜக தொடர்ந்து தமிழர்களை இழிவு படுத்தி பேசி வருகிறது.  இந்த நிலை தொடர்ந்து வந்தால் முற்றுகை போராட்டம் நடத்தி பாஜகவினரை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றுவோம்.  காங்கிரஸ் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதெல்லாம் இப்படி ஒரு இழிவான செயலில் ஈடுபட்டதில்லை.

தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவார்கள்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பற்றி உண்மையை தான் கூறியுள்ளார்.  பாஜகவினரும் ராகுல் காந்தியை புகழ்ந்துதான் பேசி
வருகிறார்கள்.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கும் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அண்ணாமலை பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வந்ததை மக்கள் அறிந்து கொண்டனர்.  பிரதமர் மோடி பேசியதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தார்களா? இதிலிருந்து பாஜகவின் நிலை தெரிகிறது."

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

Tags :
Advertisement