காவல் சீருடையில் ப்ரீ வெட்டிங் சூட் - வைரலாகும் வீடியோ!
மதுரையில் காவல்துறை சீருடையில் ப்ரீ வெட்டிங் சூட் நடத்திய காவலரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் என்றாலே மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு தான். வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த தருணங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்து காலந்தோறும் கண்டுமகிழ்வது நம் வழக்கமாகிவிட்டது. சமீப காலங்களில் திருமணத்திற்கு முன்பு, பின்பு என பல போட்டோ ஷூட்களை புது திருமண தம்பதியர் எடுத்துவருகின்றனர்.
அதிலும் பல தீம்களை வைத்து நடத்தப்படும் இந்த ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் மிகப் பெரிய கிரேஸாக மாறியுள்ளது. அதற்காக புதுமணத் தம்பதிகள் தங்களுக்குப் பிடித்த இடங்களில் வீடியோக்களை படமாக்கி வருகின்றனர். இன்னும் சிலர் மிகவும் வித்தியாசமான இடங்கள் மற்றும் பொருள்களில் போட்டோஷூட் செய்கிறார்கள். அந்த வகையில் மதுரையில் காவலர் ஒருவர் எடுத்த போட்டோஷூட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், காவல்துறை சீருடை அணிந்து அப்பன் திருப்பதி காவல் நிலையத்திலிருந்து வெளியே வருவது போலவும், இருசக்கர வாகனத்தில் அழகர் கோவில் செல்வது போடவும் காட்சிகள் பதிவாகியுள்ளன. காவல்துறை சீருடை அணிந்து கொண்டு திருமணம் செய்யக்கூடிய பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை, இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லை, மேலும் இருசக்கர வாகனத்தை இயக்கி செல்லும்போது செல்போனில் பேசுவது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவ்வாறு தங்கள் செய்யும் பணிகளுக்கு ஏற்றவாறு போட்டோஷுட் செய்யும் பலர் வழக்குகளில் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது. மருத்துவர்கள் நோயாளிக்கு மருத்துவம் செய்வது போன்று போட்டோசூட் எடுத்ததும் மேலும் இதுபோன்ற பல வீடியோக்கள் சர்ச்சையை கிளப்பியதும் குறிப்பிடதக்கது.