For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

53-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - எதற்கெல்லாம் வரி குறைகிறது..?

09:09 PM Jun 22, 2024 IST | Web Editor
53 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்   எதற்கெல்லாம் வரி குறைகிறது
Advertisement

53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எதற்கெல்லாம் வரி குறைகிறது என்பது குறித்து பார்க்கலாம். 

Advertisement

டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் மறைமுக வரி விதிப்பை மொத்தமாக மாற்றி அமைத்த ஜிஎஸ்டி தொடர்ந்து மெருகேற்றப்படும் அவசியம் இருக்கும் காரணத்தால் ஜிஎஸ்டி குறித்து முடிவெடுக்கும் உச்சக்கட்ட அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது கூட்டம் நடைபெற்றுள்ளது.

அதன்பின் செய்தியாளர்களுடன் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது, ரயில் நிலைய நடைமேடை சீட்டுகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

வரிவிலக்கு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியவை பின்வறுமாறு:

வரி குறைப்புகள்:

பிளாட்பார்ம் டிக்கெட்டுகள்:

இந்திய ரயில்வே துறையால் வழங்கப்படும் சேவைகள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் போன்றவை ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

விடுதி கட்டணம்:

கல்வி நிறுவனங்களுக்கு வெளியே மாணவர்கள் தங்கும் இடத்திற்கு வழங்கப்படும் மாதம் ரூ.20,000/- வரையிலான விடுதி வாடகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிஜி, ஹாஸ்டல் போன்றவற்றில் தங்கம் மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.

பால் கேன் (Milk Cans):

ஸ்டீல், இரும்பு, அலுமினியம் என எந்த உலோகத்தால் ஆன பால் கேன் ஆக இருந்தாலும், அனைத்திற்கும் சீரான 12% ஜிஎஸ்டி வரி விதிக்க கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

கார்டன் பெட்டிகள் (Carton Boxes):

அலை அலையான அல்லது காகிதம் அல்லது கார்ட்போர்டு ஆகியவற்றால் செய்யப்பட்ட அனைத்து வகையான பெட்டிகளுக்கும் 12% சீரான ஜிஎஸ்டி வரி விதிக்க கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இந்த வரி குறைப்பு குறிப்பாக இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள ஆப்பிள் விவசாயிகளுக்கு உதவும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஸ்பிரிங்கலர்கள் (Sprinklers):

தீயணைப்புக்கான ஸ்பிரிங்கலர்கள் உட்பட அனைத்து வகையான ஸ்பிரிங்கலர்களுக்கும் 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்பதை கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது.

உரங்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதம்:

விவசாய உரங்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைப்பது குறித்த கோரிக்கையை, வரி விகிதங்களை முறைப்படுத்தும் குழுவிற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அனுப்பியுள்ளது. தற்போது, உரங்களுக்கு 5% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. ஆனால் அதன் மூலப்பொருளான Sulphuric Acid மற்றும் Ammonia ஆகியவற்றுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது. நீண்ட காலமாக, உரங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் வரும் காலங்களில் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வரி வசூல் நிர்வாகம்:

புதிய பதிவுகளுக்கு ஆதார் கட்டாயம்:

ஜிஎஸ்டி பதிவுகளை துரிதப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் புதிய பதிவுகளுக்கு ஆதார் அடையாள சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடு:

போலி பில்களை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் Biometric Authentication கட்டாயமாக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்புட் டாக்ஸ் கிரெடிட்:

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 16(4)ன் கீழ் இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெறும் காலக்கெடு 30-11-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2017-18, 2018-19, 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டுகளுக்கு இது பொருந்தும். இதனை முழுமையாக பயன்படுத்தும் வகையில் ஜூலை 1, 2017 முதல் அமல்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

அபராதம் தள்ளுபடி:

ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 73ன் கீழ் வெளியிடப்பட்ட நோட்டீஸ்-களுக்கான வட்டி மற்றும் அபராதங்களை தள்ளுபடி செய்ய கவுன்சில் முடிவு செய்தது.

மேல்முறையிடு செய்ய கட்டுப்பாடு:

மேலும், அரசாங்கம் எதிர்கொள்ளும் வழக்குகளை குறைப்பதற்காக, ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு ரூ.20 லட்சம், உயர் நீதிமன்றத்திற்கு ரூ.1 கோடி, உச்ச நீதிமன்றத்திற்கு ரூ.2 கோடி என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் வரும் தொகைக்கு மேல் மட்டுமே துறை சார்பாக மேல்முறையீடு செய்ய இயலும்.

எதிர்பார்ப்புகள்:

ஜிஎஸ்டி கவுன்சில் 18% மற்றும் 28% ஐஜிஎஸ்டியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு பாதுகாப்புத் துறை பொருட்களின் இறக்குமதிக்கு விலக்கு அளிக்க பரிந்துரைக்கலாம். இந்த விலக்கு காலம் இந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வணிகர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படும்.

பல்வேறு தரப்பு தகவல் படி, ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் மாற்றங்கள் அல்லது புதிய இணைப்புடன் ஜிஎஸ்டிஆர்-1ஏ படிவத்தின் புதிய வகை அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் என்பதாலும், ஜிஎஸ்டி வரி முறையைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் வேளையில், தேர்தலுக்குப் பின்பு நடக்கும் இக்கூட்டம் கூடுதல் வலிமை பெறுகிறது.

Tags :
Advertisement