"இன்று மாலைக்குள் மின்விநியோகம் முழுமையாக சீர் செய்யப்படும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு
"இன்று மாலைக்குள் மின்விநியோகம் முழுமையாக சீர் செய்யப்படும்" என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே இன்று மிக்ஜாம் புயல் கரையை கடக்கிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது
இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மிக்ஜாம் புயல் தற்போது சென்னைக்கு 230 கிமீ தொலைவில் வடதிசை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு 80 கி மீ வடக்கு -வட கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது இன்று ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மச்சிலிபட்டணத்திற்கும் இடையே, பாபட்லாவிற்கு அருகே, கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பல இடங்களில் தேங்கிய மழை நீர் வடிந்து வருவதால் சென்னையில் படிப்படியாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
” இன்று மாலைக்குள் பெரும்பான்மையான இடங்களில் மின்சாரம் சீரமைக்கப்படும் என நம்பிக்கை இருக்கிறது. தற்போது மின்சார விநியோகம் கொடுப்பது படிப்படியாக அதிகரித்து கொண்டிருக்கிறோம். 6,703 பணியாளர்கள் சீரமைப்பு பணிக்காக ஈடுபட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக 300-க்கும் மேற்பட்டோர் தற்போது பணியில் இருக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் மின்சாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரை பொறுத்தவரை 1500 பணியாளர்கள் கூடுதலாக பணியாற்றி வருகிறார்கள். மற்ற மாவட்டங்களில் இருந்து அங்கே பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் “ என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.