#GovtSchool-ல் படித்து #MBBS சேரும் 2 மாணவர்கள்...கொண்டாடி வரும் கிராமம்!
அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவர்கள் இருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளது கிராமத்தையே மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு
உட்பட்ட கமலை என்ற கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி-விஜயா தம்பதியின் மகன் நாகராஜ். கால் சரிவர ஊன்ற முடியாத மாற்றுத்திறனாளியான இவர் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 5வது வரையிலும், பின்பு 4கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பீர்க்கலைக்காட்டில் 12ம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.
படிப்பில் ஆர்வம் காட்டிய நாகராஜுக்கு அவரது ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்தனர். ஒரு மாத காலமே நீட் பயிற்சி மையத்தில் படித்ததாக கூறும் நாகராஜ், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். கடுமையான முயற்சியின் பயனாக தேர்வில் வெற்றி பெற்ற இவருக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது.
சாலை வசதி, பேருந்து வசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கும் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்தே சென்று சாதித்த நாகராஜ் தனது கிராமத்தையும், தான் படித்த பள்ளியையும் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டி பெருமை சேர்த்துள்ளார். இவரின் சாதனையால் அவரது பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், ஊரே பெருமைக் கொண்டுள்ளது.
அதேபோல், நாகராஜ் படித்த அதே பள்ளியில் 12ம் வகுப்பு படித்த ரவி என்ற மாணவனும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவர் சிறுவயதிலேயே தாயை இழந்த நிலையில், இவரின் தந்தை கூலி வேலை பார்த்து வருகிறார்.
இந்த சூழலில் இவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான இடத்தை பிடித்துள்ளார். ஏழ்மை நிலையில் இருந்தும் சாதித்துள்ள நாகராஜ் மற்றும் ரவியின் முயற்சி சுற்றுவட்டார கிராம மாணவர்களிடையே ஓர் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பள்ளியில் படித்து, ஒரே மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்துள்ள இருவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.