"பூஞ்ச் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதே" - பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு!
ஜம்மு & காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த மே 11 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியில் இரு வாகனங்களில் சென்று கொண்டிருந்த இந்திய விமானப்படை வீரர்கள் மீது சிலர் துப்பாக்கிசூடு நடத்தினர். இதற்கு, விமானப்படை வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 5 வீரர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் உத்தம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் ராணுவ அதிகாரி விக்கி பஹாடே உயிரிழந்தார்.இந்த தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதற்கு பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான சரண்ஜித் சிங் சன்னியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“பூஞ்ச்-ல் ஐஏஎஃப் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இது பயங்கரவாத தாக்குதல் இல்லை. தேர்தல் வரும்பொழுது பாஜவை வெற்றி பெறச் செய்ய இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மக்களை கொன்று அவர்களின் உயிரோடும், உடலோடும் விளையாடுவது எப்படி என பாஜகவிற்கு நன்றாக தெரியும்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.