பொங்கல் விடுமுறை - 14,104 சிறப்புப் பேருந்துகள் இயக்கபடவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் !
தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து 14 ஆயிரத்து 104 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் வரும் 14-ந்தேதி பொங்கல் பண்டிகை மற்றும் 15,16-ந்தேதிகளில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வசதியாக 17-ந்தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதற்காக தமிழ்நாடுமுழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "பொங்கல் பண்டிகையையொட்டி 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 4 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப் படும் 8 ஆயிரத்து 368 பேருந்துகளுடன் 5 ஆயிரத்து 736 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்து 104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து வழக்கமாக வெளியூர்களுக்கு 2ஆயிரத்து 92 பேருந்துகள் இயக்கப்படும். இவற்றுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய பேருந்து முனையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் மற்ற ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 6 லட்சத்து 54 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். கோயம்பேட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்தில் இருந்து ஆந்திர மாநிலம் மற்றும் ஊத்துக் கோட்டை, திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலைக்கு குறிப்பிட்ட பேருந்துகள் இயக்கப்படும். மற்ற அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வழக்கமான 10 ஆயிரத்து 460 பேரூந்துகளுடன் சிறப்பு பேரூந்துகளுடன் 5 ஆயிரத்து 340 சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 800 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.